தமிழகத்தில் மிகப் பெரிய நகரங்களில் ஒன்று கோவை. இங்குள்ள அரசு மருத்துவமனை பெரிய அளவில் பேசப்பட்டாலும், அரசு மருத்துவமனை சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றசாட்டு வைக்கப்பட்டுவருகிறது.
குறிப்பாக மருத்துவமனையின் சுற்றுப் பகுதிகளில், போதுமான சுகாதாரத்தைப் பேணி காப்பது இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக மகப்பேறுக்கு வரும் பெண்கள் மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு பெட் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது.
தாய், சேய் இருவரையும் தரையில் ஒரு போர்வையை விரித்து அதில் படுக்கச் செய்யும் நிலைக்கு வசதிகள் குறைந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு மெத்தை வசதிகளைக் கூடச் செய்து தரவில்லை என்பதும், தரையில் கிடந்த போர்வையில் படுத்து, தாய் சேய் இருவரும் ஓய்வெடுத்து வரும் வேளையில், சுகாதாரமின்றி சிலர் காலணிகளை அணிந்து வந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை முதல்வர் டீன் அசோகனை அழைத்தபோது அவர் அழைப்பைத் துண்டித்தார். மாநகரின் மிக முக்கியமான அரசு தலைமை மருத்துவமனையிலேயே இந்தநிலை என்றால் மற்ற பகுதிகளில் என்ன நிலை என்பது கேள்வியே.
மருத்துவமனையை பேணிக் காக்கவேண்டிய மருத்துவமனை நிர்வாகம், தொடர்ந்து குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதும், கேள்வி எழுப்பும் போதெல்லாம் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து மௌன விரதம் கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது. உடனே மாவட்ட சுகாதார துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.