Skip to main content

திண்டுக்கல் எம்.பி. சீட்டு யாருக்கு? மோதும் கரை வேஷ்டிகள்!

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

பாராளுமன்ற தேர்தல் வருகிற 2019ல் நடைபெற் இருப்பதால் அரசியல் கட்சிகள் எல்லாம் விறு விறுப்பாக தேர்தல் களத்தில் குதித்து ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்து அதன்மூலம் நகரம், ஒன்றியங்களில் பூத் கமிட்டிகளையும் அமைத்து தேர்தல் பணிகளுக்காக கட்சிக்காரர்களை உசுப்பிவிட்டு வருகிறார்கள்.

 

 

இந்தநிலையில் ஆளுங்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் உள்ள கரை வேஷ்டிகள் போட்டி போட்டுக்கொண்டு இப்பவே சீட்டுக்காக மோதியும் வருகிறார்கள். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி நீங்கலாக திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதியை கொண்டதுதான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியாக இருந்து வருகிறது. இந்த திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் சிட்டிங் எம்பியாக இருப்பவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த உதயகுமார். இந்த உதயகுமாரின் சொந்த ஊர் நிலக்கோட்டை அருகே உள்ள ஜல்லிப்பட்டி. கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது நிலக்கோட்டை  பேரூராட்சி வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்டு உதயகுமார் தோல்வியடைந்தார். அப்படி இருந்தும் கூட ஜெ. ஆசி மூலம் எம்.பி. சீட் கிடைத்து வெற்றி பெற்றும் கூட தொகுதி பக்கம் சரிவர தலைகாட்டவில்லை. வாக்களித்த மக்களுக்கு பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. 

 

mp seat

 

இந்த நிலையில் ஜெ. மறைவிற்கு பிறகு டிடிவி பக்கம் சாய்ந்துவிட்டு மீண்டும் ஆளுங்கட்சியில் ஐக்கியமாகி தன்னை மட்டும் வளர்த்து வந்த உதயகுமார் சமீபத்தில் ரயில்வே கேட் கீப்பர் மணிமாறனை தாக்கியதின் மூலம் கட்சி தலைமைகளையும், பொதுமக்களிடமும் கெட்ட பெயரை சம்பாதித்து இருக்கிறார். அப்படியிருந்தும் கூட மீண்டும் எம்.பி. சீட்டுக்கு எடப்பாடி வரை மோதி வருகிறார். ஆனால் எடப்பாடியோ உளவுத்துறை மற்றும் கட்சிப்பொறுப்பாளர்கள் மூலம் ஆய்வு செய்து முன்னாள் முப்பெருந்துறை அமைச்சரான நத்தம் விசுவநாதனை நிறுத்தினால் வெற்றிபெற முடியும் என ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே நத்தம் விசுவநாதன் நான்கு  முறை எம்.எல்.ஏ.வாக இருந்து இரண்டுமுறை அமைச்சராகவும் மாவட்ட செயலாளராகவும் இருந்ததின் மூலம் கட்சிப் பொறுப்பாளர்கள் முதல் பொறுப்பாளர்களை வரை வந்து அறிமுகமானவராக இருக்கிறார். அதன் அடிப்படையில்தான் எடப்பாடியும் நத்தம் விசுவநாதனை களத்தில் இறக்கப் போவதாக தெரிவதால் விச்சுவும் எம்.பி. சீட்டு ரேசில் இருக்கிறார்.

 

mp seat

 

அதோடு சிட்டிங் மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான மருதராஜ் ஆரம்ப காலத்திலிருந்து கட்சியில் இருந்து வருவதால் கட்சிப் பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை நன்கு அறிமுகமானவராகவும், திண்டுக்கல் மாநகரில் முதல் மேயராகவும் இருந்து இருக்கிறார். அதன் அடிப்படையில் மருதராஜின் அமைச்சர் சீனி மூலம் எம்.பி. சீட்டுக்கு அடி போட்டு வருகிறார். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் தோல்வியை தழுவிய ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பாலசுப்ரமணி உள்பட சில ர.ர.க்களும் சீட்டுக்காக அமைச்சர் சீனிவாசனின் சிபாரிசை நாடி வருகிறார்கள். 

 

mp seat

 

தி.மு.க.வை பொறுத்தவரை கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய முன்னாள் துணை சபாநாயகர் தலைமை செயற்குழு உறுப்பினருமான காந்திராஜன் தொடர்ந்து தலைவர் ஸ்டாலினுக்கும், ஐ.பிக்கும் விசுவாசமாக இருந்து கொண்டு கட்சிப்பணியை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு கட்சி அறிவிக்கும் போராட்டம், ஆர்ப்பாட்ம், பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சிக்கு விசுவாசமாகவும், மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ.மான சக்கரபாணிக்கும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமாருக்கு ஆதரவாகவும் செயல்பட்டுக்கொண்டு கட்சித் தொண்டர்கள் மத்தியில் நல்ல பெயரும் எடுத்து வரும் காந்திராஜன் மீண்டும் தேர்தலில் குதிக்க சீட் கேட்டு வருகிறார். 

 

mp seat

 

அதுபோல் தலைமை செயற்குழு உறுப்பினரான சாணார்பட்டியைச் சேர்ந்த விஜயன், முன்னாள் அமைச்சர் விசுவநாதனோடு நத்தம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அப்படியிருந்தும் தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றிக்கொண்டு தலைமைக்கும், ஐ.பி.க்கும் விசுவாசமாக இருந்து வரும் விஜயன் இந்த எம்.பி. தேர்தலில் போட்டியிட சீட் கேட்டும் வருகிறார்.

mp

 

அதுபோல் பழனி முன்னாள் சேர்மன் வேலுமணி உள்பட சில உ.பி.க்களும் சீட் கேட்டு வருகிறார்கள். இதில் முன்னாள் அமைச்சரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பி.யின் கடைக்கண் பார்வை யாருக்கு விழுகுதோ அவர்களுக்குத் தான் எம்.பி. சீட் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

 

 

ஆனால் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி இருப்பதால் ஒரு வேலை தி.மு.க. இத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கினால் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரமும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு வருகிறார் என்ற பேச்சும் அடிபட்ட வருகிறது. அதுபோல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் உள்பட சில கதர் சட்டைகளும் சீட்டுக்காக தலைமையில் மோதி வருகிறார்கள். இப்படி பாராளுமன்ற தேர்தலுக்காக இப்பவே அரசியல் கட்சிகளில் உள்ள கரை வேஷ்டிகள் சீட்டுக்காக தலைமையில் முட்டி மோதி வருகிறார்கள்!

 

mp

 

 

mp seat

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திண்டுக்கல் மாநகர செயலாளர் ராமுதேவர் சீட்டு கேட்கிறார். ஏற்கனவே திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தினர் அதிமாக போட்டியிட்டு வெற்றி பெற்றியிருப்பதால் அதே சமூகத்தை சேர்ந்த ராமுத்தேவர் அடிபோட்டு வருகிறார்.இவர் அதிமுக முன்னாள் நகர செயலாளராகவும், மாவட்ட அளவில் கட்சிக்காரர்கள் மத்தியில் அறிமுகமானவராகவும் இருந்து வருகிறார். அவருடன் மேலும் சிலரும் சீட் கேட்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்