Skip to main content

பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றம் குறைவு: மாஃபா பாண்டியராஜன்

Published on 15/02/2018 | Edited on 15/02/2018
mafoi


பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றச்செயல்களல் குறைவு தான் என தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகம் பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக திகழ்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

அமைதியற்ற மாநிலம் தமிழகம் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதில் உண்மையில்லை. இந்தியாவிலே குற்ற எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும் பெரும் மாநிலம் தமிழகம் தான். சின்ன சின்ன மாநிலங்களை எடுக்காமல், பெரும் மாநிலங்களை ஒப்பிடுகையில், பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களை விட தமிழகத்தில் குற்ற எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.

தனிக்கட்சி தொடங்கும் தினகரன் திமுக தலைவர்கள் யாருடைய பெயரையாவது வைக்கலாம். திமுகவுடன் சேரந்து ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கொட்டும் மழையில் சம்பவம் செய்த போலீஸ்; சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி - கலக்கத்தில் கமலாலயம்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
police shot and caught the BJP rowdy

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் சத்யா என்கிற சீர்காழி சத்யா. இவருக்கு 41 வயதாகிறது. பிரபல ரவுடியான இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆரம்பத்தில் சிறு சிறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சத்யா காலப்போக்கில் முழுநேர ரவுடிசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் குற்ற சரித்திர பதிவேட்டில் முக்கிய ரவுடியாக வலம்வர தொடங்கிய சத்யா தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட ஏராளமான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். அதன் நீட்சியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு சத்யா தலைமையில் கோவையில் ஒரே நேரத்தில் 3 பேரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

குறிப்பாக தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய திருச்சி ராமஜெயம் கொலை வழக்கிலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடி சீர்காழி சத்யா உட்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சத்யாவின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகமான சமயத்தில் போலீசார் அவரை ஒடுக்க முயற்சித்தனர். அப்போது, இதனைச் சுதாரித்துக் கொண்ட சத்யா கடந்த 2021ஆம் ஆண்டில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் வினோத் ஜி செல்வம் முன்னிலையில் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். சீர்காழி சத்யா பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாலும் தனக்கு அரசியல் கட்சியின் செல்வாக்கு இருப்பதால் போலீசார் தன்னிடம் நெருங்காமல் பார்த்துக்கொண்டார். 

இதற்கிடையில், தொழிலதிபரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்ததாகக் கூறி சீர்காழி சத்யா மீது புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் சத்யாவை தீவிரமாகத் தேடி வந்தனர். காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சீர்காழி சத்யா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பல்லாவரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை உறுதிப்படுத்திய போலீசார் உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையில் வட நெம்மேலி செக் போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்துகொண்டிருந்த சத்யா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செங்கல்பட்டு அருகே பழவேழி பகுதியில் உள்ள மலையில் தனது கூட்டாளிகள் இருப்பதாக கூறியுள்ளார். அதனடிப்படையில் போலீசார் சீர்காழி சத்யாவை அழைத்துக் கொண்டு பழவேலி மலைக்கு வந்தனர்.

அப்போது அந்த வாகனம் பழவேழி வழியாக சென்றுகொண்டிருந்தபோது சத்யா மற்றும் அவருடைய கூட்டாளிகள் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தனர். இதில் போலீசார் தங்களைத் தற்காத்து கொள்வதற்காக சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். குண்டு பாய்ந்ததில் இடது காலில் பலத்த காயமடைந்த சத்யா அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார். தொடர்ந்து, சத்யாவிடம் இருந்து கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தற்பொழுது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரவுடி சத்யாவின் வழக்கை விசாரிக்க கூடாது எனக் காவல்துறையினருக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

Next Story

''எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...'' - பாஜகவிற்கு சவால் விட்ட ராகுல்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
"Keep it in writing..."-Rahul challenged the BJP

இன்று கூடிய நாடாளுமன்ற மக்களவை பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக உரையாற்றினார். 'ஜெய் சம்விதான்' என அரசமைப்பை குறிப்பிட்டு மக்களவையில் தனது உரையை ராகுல் காந்தி தொடங்கிய பொழுது பாஜக உறுப்பினர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என  முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ''அரசியலமைப்பை நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். 20க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதியப்பட்டுள்ளது. எனது வீட்டையும் எடுத்துக் கொண்டனர். அரசியல் சாசனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது' என இந்து கடவுள் சிவன் படத்தைக் காண்பித்து மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றினார். ஆனால் கடவுள் படத்தைக் காட்டியதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி, 'மக்களவையில் சிவன் படத்தை காட்ட அனுமதி இல்லையா? சிவனின் திரிசூலம் என்பது வன்முறைக்கானது அல்ல அகிம்சைக்கானது. கடவுள் சிவபெருமானின் படத்தை காங்கிரஸ் கட்சி காட்டியதால் சிலருக்கு கோபம் வந்திருக்கும். ஊடகங்கள் வாயிலாக என் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். அதிகாரம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்க்கட்சியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிகாரத்தை விட மேலானது ஒன்று இருக்கிறது. அதிகாரத்தை விட உண்மையை நம்புபவன் நான். பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல' என்றார். இதனால் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி 'கடவுளிடமே நேரடியாக பேசக்கூடியவர் பிரதமர் மோடி, காரணம் அவர்தான் நம்மைப்போல் பயாலஜிக்கலாக பிறக்கவில்லையே. பிரதமர் மோடி ஒன்றும் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநி அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பை விதைக்க மாட்டார்கள். ஆனால் பாஜக 24 மணிநேரமும் வெறுப்பைத் தூண்டுகிறது'' என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய ராகுல், ''மோடிக்கு பயந்து பாஜக தலைவர்கள் கூட எனக்கு வணக்கம் தெரிவிப்பதில்லை. அந்த அளவிற்கு பாஜக தலைவர்களைக் கூட மோடி பயமுறுத்தி வைத்திருக்கிறார். அரவணைத்து ஆதரிக்க வேண்டிய விவசாயிகளை தீவிரவாதிகள் எனக் கூறுகின்றனர். திருத்த சட்டம் விவசாயிகளுக்கானது அல்ல அது அம்பானி, அதானிகளுக்கானது. அக்னி வீரர் என்பவர் 'யூஸ் அண்ட் த்ரோ' ஊழியர்கள் போல் நடத்தப்படுகின்றனர். 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. பணம் படைத்தவர்கள் எழுதும் தேர்வாக நீட் மாறியுள்ளது. இதனால் மருத்துவக்கல்வி வியாபார பொருளாகிவிட்டது. அக்னி வீரர் திட்டத்தில் சேர்பவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அக்னி வீரர் ஒருவர் ராணுவத்தில் உயிரிழந்தால் அவருக்கு இழப்பீடும் தரப்படாது. மணிப்பூரில் உள்நாட்டு கலவரம் மூளும் மோசமான சூழ்நிலை உருவானதற்கு பாஜக அரசே காரணம். மத்திய அரசின் கொள்கையால் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டது. வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு மோடியும், அமித்ஷாவும் இதுவரை செல்லாதது ஏன்? கடவுளுடன் தொடர்பில் உள்ள பிரதமர் கடவுளிடம் கேட்டுத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டாரா? குஜராத் தேர்தலில் பாஜகவை இந்தியா கூட்டணி தோற்கடிக்கும். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.

அக்னி வீரர் திட்டம் குறித்து ராகுல் பேசுகையில் இடைமறித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  'ராகுல் தவறான விபரத்தை சொல்கிறார். அக்னி வீரர் உயிரிழந்தால் மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குகிறது' என்றார். அதேபோல் இந்துக்களை அவமதித்துப் பேசியதற்கு ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.