காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் ரேஷன் அரிசியை கடத்தி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் நுகர்பொருள் வாணிபக் கிடங்கு இயங்கி வருகிறது. இந்த கிடங்கிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு அனுப்பப்படுகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதால், அந்த பொருட்களை ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கு இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் காட்டுமன்னார்கோயில் பகுதியில் தற்போது சரி பாதி கடைகளில் அது வழங்கப்படாத சூழ்நிலையில், கடந்த 10-5-2020 அன்று காட்டுமன்னார்கோயில் நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து 'டி.என்.32.எல்.4888' என்ற எண்ணுள்ள லாரியிலிருந்து பூவிழுந்த நல்லூர், மதகடி ஆகிய இடங்களில் ரேஷன் அரிசி மூட்டை ரூ500-க்கு பொதுமக்கள் மத்தியில் திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது. இந்த தகவலை மண்டல மேலாளர், கடலூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் கடந்த 2 நாட்களுக்கும் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
தற்போது ரேஷன் அரிசியை விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் அரிசியை கடத்தி விற்பதற்கு உடந்தையாக இருந்த வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு பிரகாஷ் தலைமையில் காட்டுமன்னார்கோயில் துணை வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 18 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று நுகர்பொருள் வாணிபக் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.