புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள ராராபுரம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த தம்பி ராமையா, சினிமாத்துறையில் பிரபலமடைந்து சாதித்துவருகிறார். சினிமாவில் சாதிக்கத் தொடங்கினாலும் பிறந்த மண்ணையும், உடன் பிறந்தோர், உறவுகளையும் நேசிப்பவர். அவரது உடன்பிறந்த தம்பி உமாபதி, இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு திருமணமான 10 வருடங்களுக்குப் பிறகு இரட்டை ஆண் குழந்தைகள் அகிலன், முகிலன் பிறந்தனர். உமாபதி ரியாத்தில் வாட்டர் ஹீட்டர் ப்ராஜெக்டில் 2014ஆம் ஆண்டு 'மிஸ்டர் ப்ரைன்' அவார்டு வாங்கியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ராஜகுமாரியின் தந்தை உடல்நக்குறைவால் உயிரிழந்ததால் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு வந்தனர். தந்தை இறந்த 15 நாட்களில் மலேசியாவில் இருந்து ஊருக்கு வந்த தம்பியும் கரோனாவுக்குப் பலியான நிலையில், அடுத்து அவரது தாயாரும் உயிரிழந்தார். இப்படி தன் குடும்பத்தில் ஒவ்வொரு உயிராக பறிபோவதை நினைத்து மனமுடைந்திருந்த ராஜகுமாரிக்கு, 25 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று கண்டறியப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் கூட சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இப்படி அடுத்தடுத்து நடக்கும் துயரங்களைத் தாங்கமுடியாமல் கதறிக்கொண்டிருக்கிறார்கள் தம்பி ராமையாவின் குடும்பத்தினர். தம்பி ராமையா இயற்கை மீதும் சுற்றுச்சூழல் மீதும் ஆர்வம் உள்ளவர். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விவேக் உயிரிழந்தபோது, அவரது நினைவாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் இளைஞர்கள் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனால் உலகமெங்கும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டனர். கொத்தமங்கலம் இளைஞர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு 'நம் புதுக்கோட்டை மண் எப்பவும் முன்னோடியான மண் என்பதைக் காட்டிவிட்டீர்கள்' என்று பாராட்டினார்.
இந்த நிலையில்தான், தம்பி ராமையாவின் தம்பி மனைவி ராஜகுமாரி கரோனா தொற்று ஏற்பட்டு இறந்த தகவல் அறிந்த கொத்தமங்கலம் பசுமைப் புரட்சி ரமேஷ் என்ற இளைஞர், அய்யனார் கோயில் வளாகத்தில் ராஜகுமாரி பெயரில் மரக்கன்று நட்டு இன்று மண்ணுக்குள் விதையாக விழுந்த ராஜகுமாரி, விருட்சமாக எழுந்து நிற்பார் என்றார். சோகத்தில் இருக்கும் நடிகர் தம்பி ராமையைா, “என் உடன் பிறந்த தம்பி உமாபதிதான் என் வாழ்க்கையின் நிஜ ஹீரோ. தம்பி மீதான பாசத்தால்தான் என் மகனுக்கு உமாபதி என்று பெயர் வைத்திருக்கிறேன். என் வாழ்க்கையில் கடந்துவந்த பாதையில் மிகப் பெரிய கொடூரமான நாட்கள். அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.
கடைசியில் ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு. இந்தக் கரோனா என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை உணர்ந்துவிட்டேன். என் அன்பு உறவுகளே, அரசாங்க வழிகாட்டு முறைகளைக் கடைப்பிடியுங்கள், உயிரிழப்புகளைத் தவிருங்கள். வலியும், வேதனையும் உணர்ந்து சொல்கிறேன்” என்றார். எத்தனை சோகத்தில் இருப்பவர்களையும் தனது அசாத்திய பேச்சால், நடிப்பால், உடல்மொழியால் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த தம்பி ராமையாவின் குடும்பம் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறது. எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று கடைசிவரை போராடியும் காப்பாற்ற முடியவில்லையே என்ற அழுத்தம் அவர்களிடம் தெரிகிறது.