
சென்னை அண்ணாநகரில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 6 ஆம் வகுப்பு மாணவியை இடைமறித்து பழக வற்புறுத்திய இளைஞரை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்
சென்னை அண்ணா நகரில் அரசு பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென அந்த மாணவியை வழிமறித்து கையை பிடித்து இழுத்து வா பழகலாம் என கட்டாயப்படுத்தியுள்ளான். அதேசமயம் அந்த மாணவியின் தந்தை மாணவியை பள்ளியிலிருந்து கூட்டிச்செல்ல ஆட்டோவில் வந்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து உள்ளார்.
மேலும் சுற்றியிருந்தவர்கள் பலரும் அந்த இளைஞரை நையப்புடைத்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவி கடந்த சில தினங்களாக பள்ளிக்கு சென்று விட்டு தனியாக வருவதை நோட்டமிட்ட அந்த இளைஞன் வழிமறித்து பழகும்படி தொந்தரவு செய்துள்ளான். பொதுமக்களிடம் சிக்கியதும் நான் பெரிய இடத்து பையன் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. போலீசார் வந்து அவனை மீட்டு காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். விசாரணையில் கூட தனது பெயரை மாற்றி மாற்றி போலீசாரை குழப்பி வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை வைக்கப்பட்டுள்ளார் பள்ளி மாணவியிடம் வம்பு செய்த இளைஞன்.