
வேலூரில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வரை தனியார் பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. இந்த பேருந்தை இரவு நேரத்தில் மேல்மலையனூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி விட்டு அந்த பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவரும் இரவு ஓய்வெடுப்பது வழக்கம். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்தவர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தில் ஏறியுள்ளனர்.
இரவு நேரம் என்பதால், பேருந்தில் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்து ஓட்டுநர் வைத்திருந்த ரூ. 8000 பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். பேருந்து ஓட்டுநர், திருடர்களை பிடிக்க துரத்திக் கொண்டு சென்றுள்ளார். அவரை தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்கள் ஓடும்போது கொள்ளையர்கள் வைத்திருந்த செல்போன் கீழே தவறி விழுந்துள்ளது. அதை கவனிக்காமல் தப்பிச் சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் தங்கள் செல்போன் தவறி விழுந்தது தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் மீண்டும் செல்போனை எடுப்பதற்காக பெட்ரோல் பங்குக்கு வந்துள்ளனர்.
அதற்குள் அங்கு பரபரப்பாகி ஓட்டுநர், நடத்துநர், பெட்ரோல் பங்கு ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். அந்த சமயம், அவர்கள் செல் போன் எடுக்க அங்கு வர, தன்னிடம் பறித்த பணத்தை திரும்பித் தருமாறு ஓட்டுநர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கொள்ளையர்கள் இருவரும், பெட்ரோல் பங்கு ஊழியர்களையும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை தாக்க முற்பட்டனர். அப்போது அங்கு மக்கள் கூட்டம் கூடியது. கூட்டத்தை கண்டதும் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் ராஜா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் அரசு கல்லூரியில் படிக்கும் மாணவன், மற்றொருவர் 16 வயது பாலிடெக்னிக் மாணவன் என்பதும் தெரியவந்தது.
இருவரும் குடிபோதையில் மேல்மலையனூர் அப்பகுதியில் நின்றிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு வரும்போது பெட்ரோல் பங்க் அருகில் நின்றிருந்த பேருந்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநரிடம் பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.