திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவியை அந்தக் கல்லூரி முதல்வர் தாக்கியதாக எழுந்த புகாரால் முதல்வரை கண்டித்து மாணவிகள் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், கலிங்கம் உடையான் பட்டியைச் சேர்ந்த மாணவி அந்தக் கல்லூரியில் முதுநிலை இயற்பியல் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், நேற்று சக மாணவிகளோடு அமர்ந்து மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு வந்த முதல்வர் பொன் பெரியசாமி, அந்த மாணவியின் தலையில் கையில் வைத்திருந்த நோட்டைக் கொண்டு அடித்ததாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
மாணவி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த புலிவலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதற்கிடையில் கல்லூரி முதல்வர் பெரியசாமி தொடர்ந்து இப்படிப்பட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.