திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பல்லடம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன. மருத்துவமனையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கிருந்த நோயாளிகளிடம் சிகிச்சை ஒழுங்காக அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கேள்விகளை எழுப்பினார்.
அங்கு 10 ஆம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் தற்கொலைக்கு முயன்ற அனீஸ் என்ற சிறுவனை கண்டுள்ளார். மாணவர் குறித்து அவரது அருகில் இருந்தவர்கள் எடுத்துரைத்தனர். உடனடியாக மாணவரின் அருகில் சென்ற அவர், மாணவரிடம் நலம் விசாரித்துள்ளார். இதன் பின், “நாங்கள் 10, 12, கல்லூரிகளில் அரியர் எல்லாம் வைத்துள்ளோம். அதற்கு என்ன செய்வது. இப்போது நல்ல வேலையில் தான் இருக்கிறேன். உங்கள் ஊர் கலெக்டராக போட்டுள்ளார்கள்.
பாஸ், பெயில் என்பதெல்லாம் கிடையாது. இதற்கு பின் எப்படி இருக்கிறோம் என்பது தானே முக்கியம். எல்லாம் டெஸ்ட் தானே நமக்கு. ஜாலியாக இருக்க வேண்டும். மார்க் குறைந்ததற்கு தான் இந்த முடிவா? நாங்க எல்லாம் ஃபெயில் ஆகிவிட்டே ஜாலியாக இருக்கிறோம். உனக்கு என்ன பிரிவு வேண்டுமோ அதைப் படி. இங்கு விட்டதை 12 ஆம் வகுப்பில் பிடி. இதுக்கெல்லாம் வருத்தப்படக் கூடாது. 12 ஆம் வகுப்பு வந்த உடன் நீயே எனக்கு போன் செய்து சொல்ல வேண்டும்” என ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.