திருச்சி மணப்பாறையில் ஆழ்துணை கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் தவறி விழுந்து இறந்த சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பராமரிப்பு இன்றி திறந்தே கிடக்கும் ஆழ்துணை கிணறுகளை கண்டறிந்து மூட வேண்டும் என்று அந்த அந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திறந்து கிடந்த ஆழ்துணை கிணறுகளை அதிகாரிகள் கண்டறிந்து துரிதமாக மூடும்பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் செம்பியநத்தம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருப்பதை , கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் இளைஞர் ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கையில் மாவட்ட ஆட்சியர் உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் உங்கள் பகுதியில் பிடிஓ வை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் நான் என்ன உனக்கு சரவணபவன் சர்வரா என்ற கேள்வியையும் கேட்டு போனை வைடா ராஸ்கல் என்று பேசி அலைபேசியை வைத்த உரையாடல் செய்தி சமூக வலைத்தளங்களில் தொலைக் காட்சிகளிலும் செய்தியாக வெளிவந்தது.
இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தொலைபேசியில் பதிவாகியுள்ள குரல் என்னுடையது இல்லை என்றும் நான் அப்படி எந்த இளைஞருடன் அலைபேசியில் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தது அச்செய்தி சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
மேற்படி சம்பவத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெயரில் ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட இளைஞரைக் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர் பெரகம்பி சீனிவாசன் காவல்துறை துணைத் தலைவரிடம் மனு அளித்தார்.
இது குறித்து அவர் நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் பெரகம்பி சீனிவாசன் பேசுகையில் "கடந்த ஒரு வாரமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசிய அந்த குரல் சமூகவலைதளங்கள் மற்றும் தொலைகாட்சிகளில் வெளியாகி ஒரு மாவட்டத்தின் கலெக்டர் இப்படி பேசலமா? என பொதுமக்கள் இடையே பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஆடியோ வெளியானவுடன் கரூர் ஆட்சித்தலைவர் அன்பழகன் உடனே அது என்னுடைய குரல் அல்ல என்று மறுப்பு தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் உண்மையில் பேச வில்லை என்றால் உண்மையில் அந்த ஆடியோவை தயாரித்து வெளியிட்டது யார்? இந்த ஆடியோ பிண்ணனியில் என்ன நடந்தது என்பதை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் என்கிற முறையில் உண்மையை காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனு மத்திய மண்டல துணைத்தலைவரிடம் கொடுத்துள்ளேன். "போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்" என்றார்.