கமல்ஹாசன் போட்டியிட்ட சட்டமன்றத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள், அரசியல் கட்சிளைச் சேர்ந்த வேட்பாளர்கள் என மொத்தம் 21 பேர் போட்டியிட்டனர்.
இதில் பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் கமல்ஹாசனை வீழ்த்தினார்.
இந்த நிலையில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இந்துஸ்தான் ஜனதா கட்சியின் தென்மண்டலத் தலைவர் கே.ராகுல் காந்தி தனது தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், "மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்ததால் பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் வெற்றிப் பெற்றுள்ளார். எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரியுள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுயேச்சையாகப் போட்டியிட்ட கே.ராகுல் காந்தி 73 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.