
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் சூலூர் காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மினி லோடு ஆட்டோ ஒன்று வந்தது. உடனே போலீசார் அந்த ஆட்டோவை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டிவந்த ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநரையும் உடன்வந்த நபரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை (35) மற்றும் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (30) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் சூலூர், சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மினி ஆட்டோக்களைத் திருடியதும் தெரியவந்தது.
அப்படி திருடப்படும் ஆட்டோவில் உள்ள உதிரி பாகங்களைத் தனித்தனியாக பிரித்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்துவந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சூலூர் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருடிய 6 மினி ஆட்டோக்கள், காங்கேயம்பாளையம் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் காங்கயம்பாளையம் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 6 மினி ஆட்டோக்களைப் பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.