கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு கோபரேஸ்புரம் கோபிநாத் என்பவர் ஆவண சரிபார்ப்புக்கு வந்துள்ளார். சரியான முறையில் இல்லாததால், முறையான ஆவணங்களைக் கொண்டு வரும்படி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கோபிநாத், தகாத வார்த்தைகளால் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியை திட்டியுள்ளார்.
அப்போது குறுக்கிட்டு தடுத்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த உதவியாளர் முத்துசாமியை கோபிநாத் மிரட்டியுள்ளார். மேலும் முத்துசாமியை, ஊரில் இருக்க முடியாது; வேலையைக் காலி செய்துவிடுவேன் எனக் கூறி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கக் கூறியுள்ளார். மிரட்டலால் மேஜை மீது அமர்ந்திருந்த கோபிநாத் முன் தரையில் காலில் விழுந்து முத்துசாமி மன்னிப்பு கேட்டார்.
இதனிடையே, தான் மன்னித்துவிட்டதாகவும், தன் மீதும் தவறு இருப்பதாகவும் கோபிநாத் கூறும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறுகையில், "கிராம உதவியாளரை காலில் விழ வைத்த சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, ஒற்றர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு ஆர்.டி.ஓ. நேரில் சென்று விசாரிக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.