திருச்சி மாவட்டம் கோரை ஆற்றில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் குடமுருட்டி ஆற்றில் சென்று காவிரியில் கலக்கிறது. எனவே கோரை ஆற்று வெள்ளம் வடிய ஏதுவாக முக்கொம்பு மேலணையில் இருந்து கல்லணை செல்லும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் முக்கொம்பு மேலணையிலிருந்து பிரியும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. கடந்த 8ஆம் தேதி மாலைமுதல் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேறியது.
மேலும், நீர்வரத்து அதிகரித்ததால் வினாடிக்கு 17 ஆயிரத்து 393 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே, சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் நிலையில் நேற்று முன்தினம் (10.11.2021) வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் அன்று நள்ளிரவு கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை வந்து சேர்ந்தது. மேலும், பவானிசாகர் அணை நிரம்பி அங்கிருந்து வினாடிக்கு சுமார் 6 ஆயிரம் கனஅடி வீதமும் அமராவதி அணையிலிருந்து சுமார் 2 ஆயிரத்து 500 கனஅடி வீதமும் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாயனூர் கதவணையிலிருந்து வந்த தண்ணீர் புதன்கிழமை (10.11.2021) மாலை 4 மணிக்கு முக்கொம்பு மேலணைக்கு வந்தது. தண்ணீர் அளவு வினாடிக்கு 22 ஆயிரத்து 453 கனஅடியாக உயர்ந்தது. அந்தத் தண்ணீரை அப்படியே கொள்ளிடம் ஆற்றில் உபரியாக திறந்துவிடப்பட்டது. பின்னர் படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்து, இரவு 10 மணி அளவில் முக்கொம்பு மேல் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. கல்லணை நோக்கி செல்லும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டதால், 35 ஆயிரம் கனஅடி தண்ணீரும் உபரியாக கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டது.
இந்த நிலையில், கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.