இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரும், அகில இந்திய நிர்வாக குழு உறுப்பினரும், எழுத்தாளருமான சி.மகேந்திரனுக்கு சென்ற 29 -ஆம் தேதி நடைபெற்ற பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை, கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தமிழகம் முழுக்க கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், தொண்டர்கள், முற்போக்கு இலக்கியவாதிகள், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் மத்தியில் இச்செய்தி அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது. சிகிச்சையில் இருக்கும்போதே சி.மகேந்திரன் நம்மிடம், "எனக்கு லேசாக காய்ச்சல் இருந்தது, உடல் வலியும் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்தேன், அதில் கரோனா பாசிட்டீவ் என ரிசல்ட் வந்ததால் உடனே மருத்துவமனையில் அட்மிட்டானேன்.
இது ஆரம்ப நிலைதான். சளி தொந்தரவு முழுமையாக இல்லை காய்ச்சலும் குறைந்து வருகிறது. நலமாக இருப்பதாக நான் உணர்கிறேன். கரோனாகூட கருனைகாட்டும். ஆனால், அதிகாரத்தில் உள்ள மக்கள் விரோதிகள் ஏழை, எளிய, நடுத்தர, தொழிலாளி வர்க்க மானுட சமூகத்தின் மீது துளியும் அக்கரை காட்டாமல் கருனையற்ற கயவர்களாக உள்ளார்கள். இதற்காக நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. நிச்சயம் நான் மக்கள் களத்திற்கு வருவேன்” என அப்போது கூறினார். 10 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கரோனா பரிசோதனை மீண்டும் செய்தபோது நெகட்டீவ் என ரிசல்ட் வந்ததோடு முழு நலம்பெற்று 08.09.2020 அன்று மாலை தனது இல்லத்திற்கு திரும்பினார். "நான் நலமாக இருக்கிறேன். மீண்டும் நாவல் எழுதும் பணியைத் தொடங்குகிறேன்" என்றார்.