'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதே சமயம் இந்த திட்டத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்தது. இத்தகைய சூழலில் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு நேற்று (18.09.2024) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மேலும் இந்த திட்டத்திற்கு உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது இந்தியாவின் பல்வேறுபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைப் புறக்கணித்து, கூட்டாட்சித் தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும் ஒரு நடைமுறைச் சாத்தியமற்ற கருத்தாகும். சுழற்சிமுறையிலான தேர்தல்கள், பிராந்திய பிரச்சினைகள் மற்றும் நிர்வாக முன்னுரிமைகள் ஆகியவற்றில் உள்ள மிகப்பெரிய வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, இது நடைமுறை ரீதியாகச் சாத்தியமற்றது.
இந்த திட்டம் ஆட்சியின் இயல்பான போக்கைச் சீர்குலைத்து, அனைத்து அலுவலக விதிமுறைகளின் உண்மையற்ற சீரமைப்புக்கு வழிவகுக்கும். இந்த முழு திட்டமும் பாஜகவைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைதான். ஆனால் அவர்களால் அதை ஒருபோதும் செயல்படுத்த முடியாது. இந்தியாவின் ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப வளைக்க முடியாது. இந்த திசைதிருப்பல் தந்திரங்களில் சக்தியை வீணாக்காமல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் மாநிலங்களுக்கு வளங்களைச் சமமாக விநியோகித்தல் போன்ற அழுத்தமான பிரச்சினைகளை மத்திய அரசு தீர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.