திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத், அபுதாபி, இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இத்தகைய சூழலில் தான் இன்று (11.10.2024) மாலை திருச்சியில் இருந்து 6 குழந்தைகள் உள்ளிட்ட 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜா புறப்பட்டுச் செல்ல முயன்றது. அப்போது மேலெழும்பிய விமானத்தின் சக்கரங்கள் இரண்டும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாததை விமான ஓட்டிகள் கண்டறிந்தனர்.
இதனால் விமானிகள் மீண்டும் திருச்சி கிளம்பி விமானத்தைத் தரையிறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த விமானம் வானில் தொடர்ந்து வட்டம் அடித்துக் கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் உள்ள எரிபொருளைக் குறைத்த பிறகு தரையிறக்கலாம் எனப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். அதே சமயம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏராளமான ஆம்புலன்ஸ்கள் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்குக்காக்க போலீசார் குவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரமாக 141 பயணிகளுடன் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் 17 முறை வட்டமடித்துக் கொண்டிருந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானத்தை 2 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கி, 141 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி டேனியல் பெலிசோ உள்ளிட்ட விமான நிலைய குழுவினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்தேன்.
தரையிறங்கும் கியர் பிரச்சினை பற்றிய செய்தி கிடைத்ததும், நான் உடனடியாக தொலைப்பேசியில் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறும், இதனை ஒருங்கிணைக்கும் வகையில், தீயணைப்பு இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்புவது உட்படத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த அறிவுறுத்தினேன். மேலும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கிய கேப்டன் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.