Skip to main content

“பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 27/08/2024 | Edited on 27/08/2024
cm M K Stalin insistence for PM Modi should intervene directly

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று (27.08.2024) கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘சமக்ரா சிக்ஷா’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில், ‘சமக்ரா சிக்ஷா’  திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை என்பது தொடர்பாகப் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நாட்டின் கல்வித் துறையில் மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டம் இது என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் நிதியை விடுவிப்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் போன்றவற்றிற்குத் திட்ட ஒப்புதல் வாரியத்தின் (Project Approval Board) ஒப்புதலுக்கு உட்பட்டு நிதி விடுவிக்கப்படுகிறது.

cm M K Stalin insistence for PM Modi should intervene directly

அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிற்கு 3,586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு 2,152 கோடி ரூபாய் (60 விழுக்காடு ஆகும். மத்திய அரசின் அந்த பங்களிப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் 2024லேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான 573 கோடி ரூபாயினை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, முந்தைய ஆண்டுக்கான 249 கோடி ரூபாயையும் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. மேலும் ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு மானியம் விடுவிக்கப்படவில்லை.

சமீபத்தில், பி.எம்.ஸ்ரீ (PM SHRI) பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக அமல்படுத்துவதை, தற்போதைய ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ் நிதியை அனுமதிப்பதற்கான முன்நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயற்சிப்பது தெரிய வந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020இல் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை. பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ப வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

cm M K Stalin insistence for PM Modi should intervene directly

தமிழ்நாடு போன்ற முன்னோடி மாநிலங்கள், பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் பல சிறப்பான புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று ஆகும். பிராந்திய அடிப்படையில் சமூக பொருளாதார நிலைமைகள், உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஆதாரங்கள் போன்றவற்றில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வி தொடர்பான விஷயங்களில் மாணவர்களை பாதிக்கும் கொள்கைகளை அமல்படுத்தும் போது, அதில் ஒவ்வொரு மாநிலத்தின் நியாயமான கருத்தும் உள்ளடங்கி இருக்க வேண்டும்.

‘சமக்ரா சிக்ஷா’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிதியினை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை, பின்தங்கிய நிலையில் வாழும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதிக்கும் இத்தகைய நடவடிக்கை ‘சமக்ரா சிக்ஷா’  திட்டத்தின் நோக்கமான ‘எந்தவொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது’ என்பதற்கு எதிரானது. எனவே, ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவித்திட பிரதமர் மோடி இதில் நேரடியாக தலையிட வேண்டும். விவாதங்கள் தேவைப்படும் ஒரு கொள்கையினை கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்