உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்டுவரும் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள மேலும் சில ஆயிரம் மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தமிழக அரசு நான்கு எம்பிக்கள் அடங்கிய குழுவை அமைத்தது. அக்குழுவினர் மத்திய அமைச்சரை சந்தித்து தமிழக மாணவர்கள் மீட்பு தொடர்பாகப் பேசினார்கள்.
மேலும், நேற்று உக்ரைனில் இருந்து டெல்லி வந்த தமிழக மாணவர்களை அக்குழுவினர் சந்தித்துப் பேசினர். இந்நிலையில் உக்ரைனில் கல்வி பயின்ற மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய நிவேதா, திவ்யபாரதி, ஹரிணி, நவநீதன் ஆகியோரை நெல்லையில் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடினார். விரைவாக தங்களைத் தமிழகம் கொண்டுவந்ததற்காக முதல்வருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.