Skip to main content

குடியரசு தின விழாவை நகர் மன்ற துணைத் தலைவர் புறக்கணிப்பு

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

City council vice president boycotts Republic Day function held  Chidambaram municipality

 

சிதம்பரம் நகராட்சியில் திமுகவை சேர்ந்த  கே.ஆர்.செந்தில்குமார் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்து குமரன் துணை தலைவராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 74 ஆவது குடியரசு தின விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நகர் மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் கலந்து கொண்டு நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளரை தேசியக்கொடியை ஏற்றவைத்து கௌரவித்தார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் அஜித்தா பர்வீன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

இந்தநிலையில் குடியரசு தினவிழா அழைப்பிதழில் துணைத்தலைவர் முத்துக்குமரன் பெயர் இல்லாததால் குடியரசு தின விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ் ஜி ரமேஷ்பாபு கூறுகையில், “கடந்த  சுதந்திர தின விழா அழைப்பிதழில் நகர்மன்றத் துணைத் தலைவர் பெயர் அச்சிடப்பட்டது ஆனால் குடியரசு தின விழாவில் அச்சிடப்படவில்லை. இது நகர்மன்ற தலைவருக்கு தெரிந்து  செய்கிறார்களா? அல்லது அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் செய்கிறார்களா?  என்பது தெரியவில்லை. எனவே இந்த செயல் கண்டிக்கத்தக்கது” என்றார்.

 

மேலும் நகராட்சி சார்பில் நாளிதழ்களில் வெளியிடப்படும் விளம்பரங்களிலும் துணைத்தலைவர் பெயரை பதிவு செய்வதில் நகராட்சி ஆணையர் அலட்சியம் செய்து வருகிறார். இதற்கு நகர் மன்ற தலைவர் அமைதியாக இருப்பதால் தொடர்ந்து அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.  இதுகுறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்