Skip to main content

“பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை” - சி.ஐ.டி.யு. சௌந்தரராஜன்!

Published on 07/10/2024 | Edited on 07/10/2024
CITU Soundararajan says No decision reached in negotiations

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 1500க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 8 மணிநேர வேலை, ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 20 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தனர். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தைகள் எதிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிவடைந்தன.

அதே சமயம் சாம்சங் ஆலை தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக விரைந்து தீர்வு காணத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, சி.வி. கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்சனையில் சுமுக தீர்வு காண முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சாம்சங் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, சி.வி. கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று (07.10.2024) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சிஐடியு சங்கத் தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்த பிரச்சனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மூன்று அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து இரு தரப்பிடமும் பேசி சுமுக முடிவு  எட்டப்பட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

CITU Soundararajan says No decision reached in negotiations

அந்த அடிப்படையில் தொழிற்துறை அமைச்சர், தொழிலாளர் நலன் துறை அமைச்சர், சிறுகுறு தொழில்துறை அமைச்சர் ஆகிய மூன்று அமைச்சர்களும், தொழிலாளர் துறை செயலாளர், தொழில் துறை செயலாளர், தொழிலாளர் ஆணையர் என அனைவரும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது எங்களுடைய கருத்துக்களைக் கேட்டார்கள். எங்கள் தரப்பில் இருந்து கருத்துகளை முழுமையாகக் கூறியுள்ளோம். தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் என்ன நடந்தது?. கடந்த 16 ஆண்டுகளாகச் சங்கம் வைக்காத தொழிலாளர்கள் ஏன் சங்கம் வைத்தோம்?. எப்படி சங்கம் அமைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டோம்? என்று குறைகளை அமைச்சர்களிடம் தெரிவாகச் சொன்னார்கள். இதனை அமைச்சர்களும் நிதானமாகக் கேட்டுக் கொண்டார்கள். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கொண்டு வர வேண்டும் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டார்கள். நிச்சயம் கொண்டு வராலாம். அதுதான் எங்களுக்கும் விருப்பம்.  ஆனால் சட்டப்படி சங்கம் அமைக்க வேண்டும் என்ற பிரச்சனை, சட்டத்தில்  இருப்பதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

இது குறித்து இது குறித்து நிர்வாகத்துடன் பேசி பதிலைச் சொல்லுங்கள். அதன் பிறகு மற்றவற்றைப் பார்க்கலாம் எனக் கூறியுள்ளோம். நிர்வாகத்திடம் பேசுவதாக அமைச்சர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டு உள்ளது. நிர்வாகத்திடம் பேசிய பிறகு அவர்களின் கருத்தையும் கேட்டு எங்களிடம் பேசுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதன் பிறகு என்னவென்று பார்க்க வேண்டும். இதுதான் இன்றைக்கு நடந்தது. எனவே இந்த பேச்சுவார்த்தையின் மூலம் எந்த முடிவும் எட்டப்படவில்லை” எனத் தெரிவித்தார். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேற்று முன்தினம் (05.10.2024) முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்