தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இது தொடர்பான காணொளி வழி கருத்தரங்குகளை இராசன் காந்தி, அருள், மோகன்தாஸ் போன்றோர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதன் 34-வது அமர்வில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது; “தாய் மண்ணை துறந்து, புலம் பெயர்ந்து, இன்னொரு நாட்டில் அகதிகளாக வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை நான் அறிவேன். வட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும், பர்மாவின் ரோஹிங்யாக்களும் அன்று நீங்கள் அடைந்த துயரை இன்று அனுபவிக்கிறார்கள். உள்நாட்டு போர்கள், உரிமை போர்கள் காரணமாக அப்பாவி மக்கள் அகதிகளாக அடையும் துன்பங்கள் அளவிட முடியாதவை. நான் சிறுவயதிலிருந்தே ஈழத்தமிழர்களின் போராட்டங்களை உன்னிப்பாக கவனித்து வருபவன். ஏனெனில் எனது ஊர் தோப்புத்துறை இலங்கைக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது. அரை மணி நேரத்தில் விரைவு படகில் இலங்கை கரைக்கு சென்றுவிட முடியும். வேதாரண்யத்தில் யாழ்ப்பாண வீதி என ஒன்று இருக்கிறது. இலங்கையின் இயல்பான இயற்கை அமைப்பை எனது பகுதியில் பார்க்க முடியும்.
நான் சிறுவயது மாணவனாக இருந்தபோது ஈழ ஆதரவு நிகழ்வுகளில் பார்வையாளராக பங்கேற்றிருக்கிறேன். 1980-களின் மத்தியில் விடுதலைப் புலிகள், டெலோ, EPRLF, ப்ளாட், ஈரோஸ் என தமிழ் போராளி அமைப்புகளின் நடமாட்டம் எங்கள் பகுதிகளில் இருந்தது. போரில் பாதிப்படைந்து படகுகளில் ஆபத்தான முறையில் உயிர் தப்பி குடும்பம், குடும்பமாக கண்ணீரோடு, பசியோடு வேதாரண்யம் வரும் அகதிகளை நான் நேரில் கண்டுள்ளேன். அவர்கள் காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டு, வருகைப் பதிவு செய்யப்பட்டு பேருந்துகளில் அகதி முகாம்களுக்கு அனுப்பப்படுவர். அப்படி ஒரு முகாம் புஷ்பவனம் கிராமத்தில் அப்போது இருந்தது. ஈழப் போரை கேட்பதற்காகவே BBC வானொலியின் தமிழோசையை கேட்பதுண்டு. இன்று 30 ஆண்டுகளை கடந்தும் இந்தியாவில் வாழும் ஈழ அகதிகளின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கிறது.
நான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று சென்ற போது, இலங்கையின் வடகிழக்கில் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டசபையில் பேசினேன். ஈழத் தமிழர்களின் நலனுக்காக வெளிநடப்பும் செய்துள்ளேன். 2017-ல் சென்னையில் புயல் அடித்த போது, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களுக்கு மஜக-வினருடன் சென்று நிவாரண உதவிகளை செய்திருக்கிறேன். ஈழத் தமிழர்கள் விஷயத்தில் மனிதாபிமானத்தோடு எங்கள் அணுகுமுறைகள் இருக்கிறது.
1983 முதல் 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 பேர் ஈழ அகதிகளாக இங்கு வந்துள்ளனர். இவர்களில் 18 ஆயிரத்து 944 குடும்பங்களை சேர்ந்த 58 ஆயிரத்து 822 பேர் 29 மாவட்டங்களில் உள்ள 108 முகாம்களில் உள்ளனர். மேலும் 13 ஆயிரத்து 540 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 87 பேர் காவல் நிலையங்களில் பதிவு செய்து விட்டு வெளியில் தங்கியுள்ளனர் என புள்ளி விபரம் கூறுகிறது. அவர்கள் அனைவரும் பிள்ளைகள் பெற்று இரு தலைமுறைகளாக இங்கேயே வாழ்கின்றனர். அவர்களின் பேச்சு நடை, ஈழ பேச்சு நடையிலிருந்து மாறி தமிழக மக்கள் பேசும் பேச்சு நடைக்கு மாறிவிடும் அளவுக்கு இங்கு ஐக்கியமாகி விட்டார்கள். அவர்கள் சட்டம் - ஒழுங்குக்கு சேதம் ஏற்படுத்துவதில்லை. கட்டுப்பாட்டோடு வாழ்கிறார்கள். இவர்களின் உரிமைகளுக்காகவும், குடியுரிமைக்காகவும் கோரிக்கை வைத்து முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் சமீபத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, 15 பேர் சிகிச்சையில் இருப்பது வேதனை அளிக்கிறது. உயிரையே இழக்க ஒருவர் முடிவு செய்கிறார் எனில் அவரது கோரிக்கை எந்த அளவு முக்கியமானது என்பதை உணர வேண்டும்.
தற்போது தமிழக முதல்வர், ரூ.317 கோடியே 40 லட்சத்தில் இவர்களின் மேம்பாட்டுக்காக திட்டங்களை அறிவித்து, இனி இலங்கை அகதிகள் முகாம்கள் என்பது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல என்றும் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு நம் சார்பில் நன்றிகளை, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஈழத் தமிழர்களில் வசதியானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் அகதிகளாக சென்றார்கள். அந்நாடுகள் குடியுரிமை வழங்கியதால், இன்று அங்கேயே வாழ்ந்து, வளர்ந்து அந்நாடுகளின் வளர்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமான, தந்தை நாடாக அவர்கள் கருதும் இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது அநீதியாகும். சி.ஏ.ஏ. குடியுரிமை சட்டத்தில் ஆப்கான், பாகிஸ்தான், பங்ளாதேஷ் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு குடியுரிமை கொடுப்பார்களாம். இலங்கை தமிழர்களுக்கு கொடுக்க மாட்டார்களாம். இது என்ன நியாயம்? என நான் தொலைக்காட்சி விவாதங்களிலும், பொதுக் கூட்டங்களிலும், போராட்டங்களிலும் கேட்டேன். மனிதநேய ஜனநாயக கட்சியினர் இதை மக்கள் கேள்வியாக மாற்றினர். அந்த வகையில் மஜக உங்களோடு என்றும் துணை நிற்கும். இந்திய ஒன்றிய அரசுக்கு, பிரதமர் மோடிக்கு இதை நாம் மீண்டும், மீண்டும் கோரிக்கையாக வைக்கிறோம்” இவ்வாறு அவர் பேசினார்.