Skip to main content

சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர்

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 
300 பேர் உயிர் தப்பினர்

சின்னசேலம் அருகே பயணிகள் ரயில், டிராக்டர் மோதியதில் ரயில் இன்ஜின் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் உட்பட ரயிலில் பயணம் செய்த 300 பயணிகள் உயிர் தப்பினர். சேலத்தில் இருந்து ஆத்தூர், சின்னசேலம் வழியாக விருத்தாசலத்துக்கு சென்றுவர 2 பயணிகள் ரயில் இயங்கி வருகிறது. நேற்று காலை 9.30 மணியளவில் சேலத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரயில் 11.10 மணியளவில் சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பி ஆளில்லா ரயில்வே கிராசிங் அருகே வந்தது. அப்போது, மண் அள்ளிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. அந்த டிரைவர் ரயில் வருவது தெரியாமல் சாலையை கடக்க முயன்றார். 

கண்ணிமைக்கும் நேரத்தில், பின்னால் இருந்த டிப்பர் மீது ரயில் இன்ஜின் அதிவேகமாக மோதியது. இதில் டிப்பர் கொக்கி கழன்று, பள்ளத்தில் ஓடி விழுந்தது. ரயில் இன்ஜினின் முன்பாகம் முற்றிலும் சேதமடைந்து, சுமார் 100மீட்டர் சென்று நின்றது. டிராக்டர் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுடன், தலைமறைவானார். 

விபத்தில் சிக்கிய ரயிலை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இந்தநிலையில் விருத்தாசலத்தில் இருந்து சேலம் சென்ற ரயிலை சின்னசேலம் ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு, அதிலிருந்த இன்ஜினை பொன்பரப்பிக்கு எடுத்து சென்று, விபத்தில் சிக்கிய ரயிலை சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு இழுத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் சின்னசேலம் போலீசார் வந்து, பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் 300 பயணிகள் உயிர் தப்பினர்.

சார்ந்த செய்திகள்