சென்னை, அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க.வின் 15வது பொதுக்குழு கூட்டம் இன்று (09/10/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அதில், தி.மு.க.வின் தலைவராக இரண்டாவது முறையாகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனை, உட்கட்சித் தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி பொதுக்குழுவில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர், க.அன்பழகன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.
அதேபோல், தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக அமைச்சர் துரைமுருகன், கட்சியின் பொருளாளராக இரண்டாவது முறையாக, கட்சியின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்சியின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க.வின் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 5,000 பேர் கலந்துக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு மதிய உணவு விருந்துக்கும் கட்சித் தலைமை ஏற்பாடு செய்துள்ளது.
தி.மு.க. உட்கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.