திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த மே ஒன்றாம் தேதி சித்திரை திருவிழா கோவில் வளாகத்திற்குள்ளேயே வெகுவிமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் தங்க கருட, கற்பகவிருட்ச, சிம்ம, யாளி, இரட்டை பிரபை, கருட, சேஷ, அனுமந்த, ஹம்சவ, யானை, குதிரை ஆகிய வாகனங்களில் கருட மண்டபத்தில் எழுந்தருளுவார்.
ஒன்பதாம் நாளான நேற்று (09.05.2021) நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வலம் வருவதற்குப் பதிலாக தங்க கருட வாகனத்தில் வலம் வந்தார். காலை 6.30 மணிக்கு கருட மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், அங்கு நண்பகல் 12 மணிமுதல் மதியம் 3 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். இரவு 7.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாள் அன்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுவார் என்று கோவில் நிர்வாகம் திருவிழா பணிகளை வடிவமைத்துள்ளது.