திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 18 வது நாளாக இரவு பகல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் இருந்து மின் இணைப்பு எடுத்து போராட்டத்திற்கு பயன்படுத்தி வந்தனர். போராட்டத்தை கலைக்க அதிமுக அரசு, தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான நிலோபர்கபில் நெருக்கடியில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதில் ஒருபகுதியாக வாணியம்பாடி நகர உதவி ஆய்வாளர் கணேசன், மின்சாரம் திருடி போராட்டத்துக்கு பயன்படுத்துகிறார்கள் என பொய்யாக தந்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர மின்வாரிய துறையின் அதிகாரிகள், பள்ளி வாசலின் மின் இணைப்பை துண்டிக்க பெண் அதிகாரி ஒருவர் வந்தார்.
போராட்ட களத்துக்கு அனுமதியில்லாமல் மின்சாரம் எடுத்தற்காக மின் இணைப்பை துண்டிப்பதாக கூறினார். மின் இணைப்பை துண்டிக்க வந்த அதிகாரிக்கு அங்கு போராட்டக்குழு கூட்டத்தில் இருந்த சிறுவர்கள் பூ கொடுத்து வரவேற்றனர். அதிகாரிகளும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு சென்றனர்.
மின் இணைப்பை துண்டிக்க வந்த அதிகாரிக்கு பூங்கொத்து தந்து வரவேற்றதும், அவர்கள் அதை புன்னகையோடு வாங்கிக்கொண்டு கடைமையை செய்ய வந்தோம் எனச்சொல்லி தங்கள் பணியை செய்துவிட்டு சென்றனர். போராட்டக்குழு தற்போது ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெற்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.