நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், பத்தாம் வகுப்புப் படித்து வருகிறார். துத்திக்குளம் தொட்டிப்பட்டியைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர், காளப்பநாயக்கன்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார்.
இந்த மாணவர், 17 வயது சிறுமியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்தச் சிறுமியிடம் சென்று தன்னை காதலிக்கும்படியும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மாணவியிடம் இருந்து எதிர்பார்த்த பதில் வராத நிலையில், கடந்த மே 12- ஆம் தேதியன்றும், மாணவியின் வீட்டுக்குள் தடாலடியாக நுழைந்த மாணவர், மீண்டும் தன்னை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனால் மனம் உடைந்த அந்த மாணவி, தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர்ப் பிழைத்தார்.
மருத்துவமனையில் இருந்து மாணவி வீடு திரும்பினாலும், அவர் முன்பு போல பெற்றோர் உள்பட யாரிடமும் சகஜமாக பேசி பழகாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் அந்த மாணவர் மீது புகார் அளித்தனர். இதையறிந்த மாணவர் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில், ஜூன் 1- ஆம் தேதி இரவு, அந்த மாணவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அவருடைய உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக மாணவரை சேந்தமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சிறப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.