ராசிபுரம் அருகே, சட்ட விரோதமாக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்த ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர், அவருடைய கணவர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காட்டூர் காட்டுக்கொட்டாய் வள்ளியம்மாள் நகரைச் சேர்ந்தவர் அமுதா என்கிற அமுதவல்லி. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக (எப்என்ஏ) பணியாற்றி வந்த இவர், கடந்த 2012ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய கணவர், ரவிச்சந்திரன், ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 30 ஆண்டுகளாக அமுதா, குழந்தைகளை சட்ட விரோதமாக பெற்றோர்களிடம் இருந்து வாங்கி, குழந்தையில்லா தம்பதிகளிடம் பணத்திற்கு விற்பனை செய்து வந்ததாக ஏப்ரல் 25, 2019ம் தேதியன்று சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியாகின. ஆடு, மாடுகளை தரம் பிரித்து விற்பனை செய்துவதுபோல் கருப்பான குழந்தைக்கு ஒரு விலை, குண்டான கொழு கொழு குழந்தைக்கு ஒரு விலை என தரம் பிரித்து ரூ.2.70 லட்சம் முதல் 4.25 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாக அமுதாவே செல்போனில் ஒருவரிடம் பேசும் உரையாடலும் வெளியானது.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட நாமக்கல் மாவட்ட காவல்துறை, உடனடியாக அமுதாவையும், அவருடைய கணவரையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டது. ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், செல்லமுத்து, இந்திரா ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், அமுதா, குழந்தைகளை சட்ட விவோதமாக பெற்றோர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி விற்பனை செய்து வரும் இடைத்தரகர் என்பதும் தெரிய வந்தது. இந்த கும்பலின் இலக்கு பெரும்பாலும், கொல்லிமலையில் வசிக்கும் பழங்குடி மக்கள்தான் என்பதும், அவர்களிடம் ஆசைவார்த்தை காட்டி, குழந்தைகளை சொற்ப விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.
ஆதிவாசி தம்பதி ஒருவரிடம் அமுதா, வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பெண் குழந்தையை வாங்கிச்சென்று ஈரோட்டைச் சேர்ந்த குழந்தையில்லா தம்பதியிடம் 1.50 லட்சம் ரூபாக்கு விற்பனை செய்துள்ள அதிர்ச்சி தகவல்களும் கிடைத்துள்ளது. இதுவரை மொத்தம் 5 குழந்தைகளை இவ்வாறு சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவற்றில் ஒரே ஒரு குழந்தையை மட்டும் சட்டப்பூர்வமாக தத்துக்கொடுத்தல் ஒப்பந்தப்பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும், அந்த வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை குறித்தும் காவல்துறையினர் குறுக்கு விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொல்லிமலையில் பழங்குடியின தம்பதிகளிடம் குழந்தைகளை விலைக்கு வாங்கி வருவதில் அமுதாவுக்கு உதவியாக 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் முருகேசன் என்பவருக்கு தொடர்பு இருந்ததும் தெரிய வந்துள்ளது. அமுதாவின் கணவர் ரவிச்சந்திரன், குழந்தையில்லா தம்பதியிடம் பணம் வசூலித்துக் கொடுக்கும் வேலையையும், ராசிபுரம் நகராட்சியில் போலி பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொடுக்கும் வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
இதையடுத்து, அமுதவள்ளி, அவருடைய கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை செங்கரை பவர்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல் இதுவரை யார் யாருக்கு குழந்தைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளனர் என்பது குறித்து அவர்களை அடையாளம் காணும் வேலைகளிலும் இறங்கியுள்ளனர். மேலும், இவர்கள் மட்டும்தான் நேரடியாக இதுபோன்ற சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டுள்ளனரா அல்லது வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
போலி பிறப்புச்சான்றிதழ் பெற்றுத்தருவதாகச் சொல்லப்படுவது உண்மையெனில் அதில் ராசிபுரம் நகராட்சி ஊழியர்களுக்கும், அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், அமுதா ஏற்கனவே பணியாற்றி வந்த பள்ளிபாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மகப்பேறு மருத்துவர்கள், செங்கரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், நகராட்சி ஊழியர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
அடுத்தடுத்த நாள்களில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.