Skip to main content

ஆதரவு தருவதாகக் கூறி கட்டைப் பையில் குழந்தையைக் கடத்திய பெண்... தஞ்சையில் பரபரப்பு!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

child incident excitement in Tanjore!

 

காதல் திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டார் ஆதரவும் இல்லாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதுபோல நடித்து மருத்துவமனையிலிருந்து குழந்தையைக் கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

 

தஞ்சாவூர் ராசா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனை. தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, அரியலூர் மாவட்டங்களில் சிக்கலான கர்ப்பிணிப் பெண்களையும், பிரசவம் நடந்த பிறகு சிக்கலாகும் தாய் மற்றும் குழந்தைகளையும் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு போனால் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் இன்றளவும் உள்ளது. அங்குதான் அடிக்கடி குழந்தை திருட்டுகளும் நடப்பது வேதனையளிக்கிறது.

 

தஞ்சை பர்மா காலனி பகுதியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி குணசேகரன் (வயது 24). ராஜலட்சுமி (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் இரு வீட்டார் ஆதரவும் இல்லாமல் இருந்துள்ளனர். ராஜலட்சுமி கர்ப்பமானது முதல் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்து கொண்டார்.

 

child incident excitement in Tanjore!

 

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கணவர் குணசேகரன் அவரது மனைவியை தஞ்சை ராசாமிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

 

ராஜலட்சுமி தனியாக இருப்பதைப் பார்த்த ஒரு பெண், ''உனக்காக யாரும் வரலையா? நான் உங்க அம்மாபோல இருந்து பார்த்துக்கிறேன்'' என்று கூறி 4 நாட்களாக கூடவே இருந்தவர். வெள்ளிக்கிழமை நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன். நீ குளித்துவிட்டு வா என்று ராஜலட்சுமியை குளிக்க செல்லுமாறு அனுப்பியுள்ளார். ராஜலெட்சுமியும் அவர் பேச்சை நம்பி குளித்துவிட்டு வந்து பார்த்தபோது அவரது பெண் குழந்தையை காணவில்லை. கதறி அழுதுகொண்டே கணவருக்கு தகவல் சொல்ல மருத்துவமனை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

 

child incident excitement in Tanjore!

 

அதன் பிறகு மருத்துவமனை சிசிடிவி கேமராக்களில் பார்த்தபோது ராஜலட்சுமிக்கு ஆதரவாக இருந்த பெண் குழந்தையை பச்சைநிற கட்டைப் பையில் வைத்துக் கொண்டு வெளியேறுவது தெரிந்தது.

 

இது குறித்து டி.எஸ்.பி கபிலன் தலைமையில் தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசார் குழந்தையை திருடிய பெண்ணை தேடி வருகின்றனர். சில வருடங்களாக கூடுதல் பாதுகாப்பு, சிசிடிவி பாதுகாப்பு வைக்கப்பட்டிருப்பதால் குழந்தை கடத்தல் குறைந்திருந்த நிலையில், மீண்டும் குழந்தை திருட்டு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்