திண்டுக்கல்லில் உள்ள ஜி.டி.என். கலைக் கல்லூரியில், சட்டக் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் துறை அமைச்சர் ரகுபதி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சட்டக் கல்லூரியைத் திறந்து வைத்தனர். அவர்களை ஜி.டி.என். கல்லூரி தலைவர் ரத்தினம், புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவரும் அறங்காவலருமான ராமச்சந்திரன் மற்றும் ஜி.டி.என் கல்லூரி நிர்வாக இயக்குநர் துரை ஆகியோர் வரவேற்றனர்.
இதில் பேசிய அமைச்சர் ரகுபதி, “கடந்த அதிமுக ஆட்சியில் தனியார் சட்டக் கல்லூரி தொடங்குவதற்கு கடந்த இரண்டு வருடங்களாகவே அனுமதி கொடுக்கவில்லை. நமது தலைவர் முதல்வராகப் பொறுப்பேற்ற உடனே, முறையாக இந்திய பார் கவுன்சிலில் அனுமதி பெற்று அதற்கான வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார். அதில் முதன் முதலில் இந்த ஜி.டி.என் சட்டக் கல்லூரிக்கு முதல்வர் அனுமதி கொடுத்திருக்கிறார். இது போல் மேலும் ஏழு சட்டக் கல்லூரிகள் துவங்கப்பட இருக்கிறது. தற்பொழுது சட்டக் கல்லூரியில் மாணவ மாணவிகள் அதிகமாக விரும்பிச் சேர்ந்து படிக்கிறார்கள்.
சென்னை சட்டக் கல்லூரியில் மட்டும் 700 பேர் படிக்கிறார்கள். சட்டக் கல்லூரியில் படித்தால் எந்தத் துறைக்கும் போகலாம். அதுபோல் மற்ற படிப்புக்கும் சட்டப் படிப்புக்கும் வித்தியாசம் இருக்கு. சட்டக் கல்லூரியில் படிக்கக் கூடிய மூன்று பேர் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால் அவர்களில் ஒருவர் நீதிபதியாகவோ வழக்கறிஞராகவோ இருப்பார்கள். அதன் மூலம் வழக்குக்கு தீர்வு கிடைக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டக் கல்லூரி கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் செயல்பட்டு வருகிறார். எனக்கு முன்பு பேசிய ரத்தினம், ராமச்சந்திரன் சொன்னது போல் ஒரு வீட்டுக்கு ஒரு சட்டம் படித்தவர் வர வேண்டும்” என்று கூறினார்.