சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (28/02/2022) மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், கலந்துக் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை வெளியிட்டார். அதனை தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அரசியல் என்பது எனது ரத்தத்துடன் கலந்துள்ளது, நான் அரசியல் பயிராகவே வளர்ந்தேன். எத்தனை உயர் பொறுப்புக்கு வந்தாலும் நான் உங்களில் ஒருவன்தான். கலைஞர் போல் எனக்கு எழுதவோ, பேசவோ தெரியாது; அவரை போல் எழுத முயற்சித்தது தான் உங்களில் ஒருவன். பதவி என்பதை பொறுப்பு என கலைஞர் என மாற்றியது எனக்கு பாடம். அப்போது குலக் கல்வியை எதிர்த்தோம், தற்போது நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம்.
இந்தி ஆதிக்கத்தை தற்போதும் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் திராடவியல் ஆட்சி முறை. மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். மாநில அதிகாரம் பறிக்கப்படுவதுடன் மாநில அரசியல் உரிமையும் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகிறது. சட்டத்தின் ஆட்சி என்று இல்லாமல் சமூக நீதி ஆட்சி என்று மாற வேண்டும். திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன். கூட்டாட்சி மீது நம்பிக்கையுள்ள தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழா, எனக்கு திருப்பு முனையாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
விழாவில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் மற்றும் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துக் கொண்டனர்.