உயர்கல்வித்துறை சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பட்டி கிராமத்தில் வேலம்பட்டி-பூசாரிபட்டி சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா பொறியியல் வளாக கட்டிடத்தில் இந்த கல்வியாண்டில் இயங்க உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைக் காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து திறந்து வைக்கப்பட்ட புதிய கல்லூரியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி குத்துவிளக்கேற்றி வைத்து விட்டு பேசும்போது, ''தமிழக மக்களின் நலனுக்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டில் உயர் கல்வித்துறை சார்பில் 20 கல்லூரிகள், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள், கூட்டுறவுத்துறை மூலம் ஒரு கல்லூரி என மொத்தம் 31 அரசு கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் இன்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து 20 கல்லூரிகளைத் தொடங்கி வைத்துள்ளார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்காக 4 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. உயர்கல்வித்துறை சார்பில் இரண்டு கல்லூரிகள், கூட்டுறவுத் துறை சார்பில் ஒரு கல்லூரி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு மகளிர் கல்லூரி மற்றும் பழனியில் ஒரு சித்தா கல்லூரி, கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு பயிற்சி மையம் என 6 கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறப்பட்டு கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. பல சித்த மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டு முதல் செயல்பட உள்ளது.
மேலும் தமிழகத்தில் 11 தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அதில் ஒட்டன்சத்திரத்தில் ஒரு தொழிற் பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படும். இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இன்று முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். அதேபோல் பழனி வட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி பகுதியில் அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரியில் தற்காலிகமாக செயல்பட உள்ளது. கல்லூரிக்கு விரைவில் சொந்த கட்டிடம், விடுதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்படும். அதற்காக முதற்கட்டமாக 13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி. பிகாம், பிபிஏ ஆகிய படிப்புகள் தொடங்கப்படுகின்றன. 17 பேராசிரியர்கள், 17 அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 34 பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 240 மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதற்காக இதுவரை 1,632 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறி நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் தமிழக மக்களுக்கு குடிநீர் சாலை வசதி, தெருவிளக்கு, கல்வி, பேருந்து வசதிகள் ஏற்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தொழில்துறையில் 14 வது இடத்திலிருந்த தமிழகம் தற்போது தமிழக முதல்வர் முயற்சியால் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழும் வகையில் முதல்வர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்'' என்றார்.