தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (13/08/2021) காலை 10.00 மணிக்கு கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. தமிழ்நாடு பட்ஜெட் வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கையிலும் கணினி மற்றும் கையடக்கணினி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,.ஸ்டாலின் இன்று (12/08/2021) சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள அரங்கத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.