திருச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி அரசு மருத்துவமனையில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு 846 சாதாரண படுக்கையும். 450 ஆக்சிஜன் இணைப்புக்கூடிய படுக்கைகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையின் 6வது தளத்தில் 100 ஆக்சிஜன் சிலிண்டர் இணைப்புக்கூடிய புதிய சிகிச்சை பிரிவை துவக்கி வைத்தார்.
அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சரை சந்தித்த எட்டு வயதுள்ள சிறுவன் தனது ஆன்லைன் வகுப்புக்காக மொபைல் வாங்க வைத்திருக்கும் ரூபாய் 2,500 கரோனா நிதிக்காக வழங்கினான். அதை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் 52 ஆக்சிஜன் இணைப்பு கூடிய படுக்கை மற்றும் 42 சாதாரண சிகிச்சை படுக்கை உள்ளடக்கிய சிகிச்தை மையத்தை துவக்கி வைத்து. மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள என்.ஐ.டியில் ஒரு அறைக்கு 15படுக்கைகள் வீதம் 24 அறைகளில் படுக்கை வசதிகள் கொண்ட 360 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
திருச்சியில் ஏற்கனவே கெரானா தொற்று சிகிச்சைக்கு என திருச்சி மாவட்டம், சேதுராப்பட்டியில் ஒரு சிகிச்சை மையமும், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் சிகிச்சை மையமும், மேலும் சித்த சிகிச்சைக்கு என காஜாமலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒரு சிகிச்சை மையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் வனிதா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.