நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் திமுகவின் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''நாயகன் படத்தில் ஒரு டயலாக் வரும் 'அடிச்சா தான் அடியிலிருந்து தப்பிக்க முடியும்' என்று, ஆனால் ஜனநாயக நாட்டில் ஆளை அடிக்க முடியாது. ஆனால் ஒரு சித்தாந்தத்தை அடிக்கலாம். அப்படி திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். வறுமையை திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்; கல்வியின்மை; வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை எப்படியெல்லாம் அடிக்க முடியுமோ அப்படி எல்லாம் திருப்பி திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார். முக்கியமாக சர்வாதிகாரத்தை திருப்பி அடிக்க துணிந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனால்தான் என்னை மாதிரியான ஆட்கள் எல்லாம் இங்கு வந்து நிற்கிறோம்.
நீங்கள் அவரை விமர்சனம் செய்தீர்களே என்று கேட்கிறார்கள். விமர்சனம் செய்வது எங்கள் கடமை உங்கள் கடமையும் கூட. ஆனால் ஆபத்து என்று வரும் பொழுது 'என் கையில் பிஸ்லரி பாட்டில் இருக்கிறது வீடு பற்றி எரிந்தாலும் அணைப்பதற்கு கொடுக்க மாட்டேன்' என சொல்பவன் நல்லவன் கிடையாது. நான் அப்படிப்பட்டவன் கிடையாது. எனக்கு முதலில் பரிவட்டம் கட்டு அப்போதான் தேரை இழுப்பேன் என்று சொல்லுபவன் நான் கிடையாது. இந்த ஜனநாயக தேரை இழுக்க வேண்டியது என்னுடைய கடமை. உங்களுடைய கடமை கூட. இங்க கோடி பேருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்தியில் ஒருவர் ஆயிரம் கோடிகளை ஒருவருக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்'' என்றார்.