தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26/12/2021) சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கை வசதியுடன் கூடிய 'ஒமிக்ரான்' வைரஸ் நோய்த்தடுப்பு தீவிர சிகிச்சைப் பிரிவினை (ICU) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல், 136 படுக்கை வசதியுடன் கூடிய 'ஒமிக்ரான்' வைரஸ் நோய்த்தடுப்பு சிகிச்சைப் பிரிவினையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து, சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரக வளாகத்தில் (DMS) ஆக்சிஜன் சேமிப்புக் கிடங்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அத்துடன், உயிர் காக்கும் அவசர சிகிச்சை உபகரணங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைமுதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.