திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இன்று (05/05/2022) மதியம் 01.00 மணிக்கு 'வணிகர் விடியல்' என்ற பெயரில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணிகர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "கரோனா எனும் நெருக்கடியான காலகட்டத்தில் அரசுக்கு நிதியுதவி வழங்கிய வணிகர்களைப் பாராட்டுகிறேன். இலங்கையில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்கான முயற்சிகளை நாம் தொடங்கி உள்ளோம். எதிர்க்கட்சியாக இருந்த போதும், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளோம். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த நுழைவு வரியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர் தான்.
வணிகர்கள் இறந்தால் நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 3 லட்சமாக உயர்த்தப்படும். தீ விபத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி நிவாரணம் ரூபாய் 5,000- லிருந்து ரூபாய் 20,000 ஆக உயர்த்தப்படும். வணிக நிறுவனங்கள் இனி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பித்தால் போதும்" என்றார்.