
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்வரான பிறகு முதல்முறையாக திருவாரூருக்கு சென்று, பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு புதன்கிழமை மாலை சிதம்பரம், கடலூர் வழியாக சென்னை வந்தார். அவருக்கு கடலூர் மாவட்ட எல்லையான வல்லம்படுகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் கலந்துகொண்டு அவருக்கு புத்தகங்களை வழங்கி வரவேற்றார். இவருடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் உடன் இருந்தார். அதேபோல் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் முதல்வருக்கு சால்வை மற்றும் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர். தொண்டர்கள் வழங்கும் புத்தகங்கள் மற்றும் சால்வைகளை முதல்வர் பொறுமையாக பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களும் அவரது வாகனத்திற்கு அருகே வந்து மனுக்களை வழங்கினார்கள். வண்டியை நிறுத்தக் கூறி அத்தனை மனுக்களையும் பெற்றுச் சென்றார். இந்நிகழ்ச்சிக்கு குமராட்சி ஒன்றிய திமுக சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.