தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்குச் செல்கிறார்.
சென்னையில் இருந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து நாகப்பட்டினம் செல்கிறார். நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார். ஆகஸ்ட் 24 ஆம் தேதி நாகையில் தங்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆகஸ்ட் 25 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குச் செல்லவுள்ளதால் ஆகஸ்ட் 24 ஆம் தேதி திருச்சியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ள நிலையில், அன்றைய தினமும் திருச்சியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.