நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.
பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.