ஆத்தூர் ஒன்றியம் வக்கம்பட்டி அருகே ஜெய்னீ நர்சிங் கல்லூரி வளாகத்தில் செயல்படும் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாட வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன் வரவேற்று பேசினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய செயலாளர் ஆத்தூர் முருகேசன், பாறைப்பட்டி ராமன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மார்கிரேட் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கேற்றி கல்லூரி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார்.
அதன்பின் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, ''ஆத்தூர் தொகுதியில் கூட்டுறவுத்துறையில் செயல்படும் இந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழகத்தின் சிறந்த கல்லூரியாக செயல்பட போகிறது. காரணம் இந்தியாவில் உள்ள முதல்வர்களில் முதல்வருக்கெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரம் கொடுக்கும் தெய்வம் போல் கேட்டவுடன் ஆத்தூர் தொகுதிக்கு இரண்டு கல்லூரிகளை வழங்கினார். ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆத்தூரில் கூட்டுறவுத்துறை சார்பாக கலைக்கல்லூரியும் வழங்கியதால் இப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் 1500 ரூபாய் செலவில் தங்களுடைய உயர்க்கல்வியை கற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இக்கல்லூரி விரிவடைந்து சுமார் 50 கோடி மதிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளை கொண்ட சிறந்த கல்லூரியாக உருவாகப் போகிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் தனியார் கல்லூரியில் படித்தால் தான் சிறந்த கல்வியை கற்க முடியும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் ஏன் நான் முதற்கொண்டு எல்லோரும் அரசு பள்ளியில் பயின்றவர்கள்தான். மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி தாய்மார்களின் பாராட்டை பெற்ற நம் முதல்வர் கல்லூரி மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க தயாராக உள்ளார். விரைவில் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவியருக்கும் உதவித்தொகை கிடைக்கும். மாதத்தின் இரண்டு அல்லது மூன்று முறை நான் இந்த கல்லூரிக்கு வந்து மாணவச் செல்வங்களான உங்களிடம் குறைகளை கேட்டறிவதோடு ஆசிரியர், பெற்றோர்களிடமும் கலந்து பேசி கூட்டுறவு கல்லூரியின் தரத்தை உயர்த்த பாடுபடுவேன். இங்குள்ள மாணவச் செல்வங்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் இந்த கல்லூரியில் தொடர்ந்து உயர்கல்வி கற்கும் அளவிற்கு உயரப்போகிறது அது உறுதி'' என்றார்.