![](http://image.nakkheeran.in/cdn/farfuture/iM2WNDLkxJVDEj7QuG_77yf5BoL0GnQ0GHkKydGvhhc/1533347632/sites/default/files/inline-images/STERLITE%20600_0.jpg)
துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சரும், காவல்துறை டி.ஜி.பியும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஏறக்குறைய 100 நாட்களாகப் போராடி வரும் அப்பகுதி மக்கள், ஒரு பேரணியாக சென்ற நேரத்தில் அவர்களை ஏதோ தீவிரவாதிகளை சுட்டுத் தள்ளுவதைப் போல, நவீன ரக துப்பாக்கிகள், ஏ.கே.47 துப்பாக்கிளைக் கொண்டு காவல்துறையினர் சுட்டுத் தள்ளியிருக்கின்றனர். இதில் ஏறக்குறைய 11 பேர் கொல்லப்பட்டு, பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
காட்டுமிராண்டித்தனமான இப்படிப்பட்ட சம்பவத்தை அரங்கேற்றியிருக்கின்ற காவல்துறையின் அராஜகப் போக்கை திமுக சார்பில் வன்மையாக நான் கண்டிக்கிறேன். காவல்துறையின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஏற்கனவே குட்கா ஊழல் தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் சிக்கியுள்ளார். அவர் இந்த சம்பத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்வதுதான் முறையானது. அதுமட்டுமல்ல, நேற்று காலையில் தொடங்கி இப்போதுவரை அந்தப் பகுதியில் மிகப்பெரிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
ஏறக்குறைய 11 பேர் குண்டடிக்கு உள்ளாகி இறந்துள்ளனர். ஆனால், முதலமைச்சர் அங்கு நேரில் சென்று பார்வையிட முன்வரவில்லை. முதலமைச்சர் செல்லவில்லை என்றாலும், அந்த மாவட்டத்தை சேர்ந்த, அந்த மாவட்டத்தை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்களையாவது அனுப்பி வைத்து, அங்கு அமைதியை நிலைநாட்ட, சமாதானத்தை ஏற்படுத்தும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. இப்படிப்பட்ட கையாலாகாத முதலமைச்சர் இங்கிருக்கிறார். எனவே, முதலமைச்சரும் தன்னுடைய தோல்வியை ஒப்புகொண்டு உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்வதே சாலச்சிறந்தது.
கேள்வி: தவிர்க்க முடியாத காரணத்தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்து இருக்கிறாரே?
பதில்: அவர் தனது பதவியை காப்பாற்றிக் கொள்ளவும், இந்த ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், அங்கு பலி கொடுக்கப்பட்டது பல உயிர்கள். பேரணி செல்வது குறித்து முன்கூட்டியே தெரிந்தும், எந்தவித காவல்துறை பாதுகாப்பும் ஏற்பாடு செய்யாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல், கையாலாகாத ஆட்சியை நடத்துபவர்கள் இப்படித்தான் உளறிக்கொண்டு இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.