சிதம்பரம் நடராஜர் கோவிலின் கருவறையில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரி சாமி சிலைகளுக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. இந்த ரகசியத்தை பக்தர்கள் அடையாளம் காணும் வகையில் தீபாராதனை செய்யும்போது ரகசியத்தின் முன்பு தங்க வில்வ இலைகள் தொங்கவிடப்பட்டிருக்கும். பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் போது அவர்கள் தங்க வில்வ இலைகளை கோவிலுக்கு காணிக்கையாக அளிப்பார்கள்.
சிறப்பு வாய்ந்த சிதம்பரம் ரகசியத்திற்கு முன்பாக சாற்றப்படும் தங்க வில்வ இலைகளை சென்னை போரூரில் உள்ள சிவலோக தரும திருமடத்தை சேர்ந்த ஸ்ரீ வாதவூர் அடிகள் மற்றும் சிதம்பரம் மௌன சுவாமிகள் மடம் சார்பில் 11 தங்க வில்வ இலைகள் ரூ.4 லட்சம் செலவில் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யப்பட்ட இந்த தங்க வில்வ இலைகளை கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் கொடியேற்று விழாவின்போது சிதம்பரத்தில் நான்கு வீதிகளின் வழியாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பார்வைக்கு எடுத்து வரப்பட்டு பின்பு நடராஜர் சன்னதியில் மாணிக்கவாசகர் தீபாராதனையின் போது இந்த தங்க வில்வ இலை மாலை சாற்றப்பட்டது.
11 வில்வ இலைகளிலும் சிவ புராணம் 95 வரிகளில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் மேளதாளத்துடன் எடுத்துச் சென்று நடராஜர் சன்னதியில் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்து சிதம்பரம் ரகசியத்திற்கு முன்பாக அணிவித்தனர். இதை ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கண்டு தரிசனம் செய்தனர்.