சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு நகைகளை ஆய்வு செய்ய அனுமதி இல்லை. அதனால் வெளி தணிக்கையாளர்கள் மூலம் கணக்கு மற்றும் நகைகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது என கோயில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கறிஞர் சந்திரசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்து சமய அறநிலையத்துறையினர் உள் நோக்கத்துடன் கோயில் நிர்வாகத்தை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். நடராஜர் கோயில் கணக்கு கேட்டு இரண்டுக்கும் மேற்பட்ட இந்து அறநிலையத்துறையினர் கடிதம் அனுப்பினர். பின்னர் ஆய்வுக்குழு வந்தது. அப்போது நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், தனி சமயப் பிரிவினரான பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வரும் இக்கோயிலில் அறநிலையத்துறையின் சட்டத்தின் கீழ் கணக்கு கேட்கவோ, ஆய்வையோ நடத்த முடியாது என வெளிப்படையாக பதில் தெரிவித்தோம்.
அதன் பின்னரும் 2005 முதல் 2022 வரை உள்ள நகை சரிபார்ப்பு செய்ய வேண்டும் என கோரினர். அதன் பின்னர் 1955 முதல் 2005 வரை நகை சரிபார்ப்பு, கணக்கு ஆய்வு செய்வதாக கோரிய போது நாங்கள் பட்டயம் பெற்ற வெளி தணிக்கையாளர்கள் மூலம் கணக்குகளும், நகைகளும் சரிபார்க்கப்பட்டு தணிக்கை செய்ய உள்ளோம் என பதில் தெரிவித்திருந்தோம். அதன்படி கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதியிலிருந்து கோயில் சட்ட ஆலோசகரான எனது மேற்பார்வையில் பட்டயம் பெற்ற இரு தணிக்கையாளர்கள் மூலம் கோயில் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து தயாராக வைத்துள்ளோம். நடராஜர் கோயில் தனி நிர்வாகம் என்பதால் வெளிப்படை தன்மையை நிரூபிக்கும் வகையில் வெளி தணிக்கையாளர்களை வைத்து தணிக்கையை தொடங்கி உள்ளோம்.
கோவில் நிர்வாகத்தில் தவறு உள்ளது நாங்கள் ஆய்வு செய்வோம் என்று அறநிலையத்துறை அமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இறுதியாக நாங்கள் கேட்கிறோம் கோவிலில் நடைபெற்ற எந்த தவறுக்கு என்ன ஆதாரம் உள்ளது ஆதாரத்தை எடுத்து வைக்க வேண்டும். குற்றம் இருந்தால் அந்த ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும். அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதால் அது உண்மையாகி விடாது' என்றார். கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் உடனிருந்தார்.