உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 19 ஆம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகன வீதிஉலா, டிசம்பர் 20 ஆம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதிஉலா, டிசம்பர் 21 ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதிஉலா, டிசம்பர் 22 ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், டிசம்பர் 23 ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலாவும், டிசம்பர் 24 ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடைபெற்றது.
அதே சமயம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று (25.12.2023) முதல் 28 ஆம் தேதி வரை பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கி இருந்து. இந்த அரசு உத்தரவை மீறி கனசபை மீது பக்தர்களை ஏற விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கனசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுப்பதாக கூறி தீட்சிதர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறிய கோயில் தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா புகார் தெரிவித்துள்ளார்.