சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி தேரோட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி தேர் திருவிழா விமர்சியாக நடைபெற்றது.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டு தோறும் இரு முறை ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியும் தரிசனத்திற்கு முதல் நாளில் தேர் திருவிழா நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழாவிற்கு கடந்த டிச 24- ந் தேதி கோயிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தினந்தோறும் பஞ்சமூர்த்தி வீதியுலா நிகழ்ச்சி கீழவீதி, மேலவீதி, தெற்குவீதி, வடக்கு வீதிகளில் நடைபெற்று வந்தது. தரிசன விழாவிற்கு கொடியேற்றிய 9-வது நாளில் தேர்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. தேர் மற்றும் தரின விழாவை கண்டுகளிக்க சிதம்பரம் நகருக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள், சிவனடியார்கள் கூட்டம் குவிந்துள்ளனர். இதனால் தேர் திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. தேரை பக்தர்கள் சிவ சிவா கோசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலை 6 மணிக்கு தேர் கீழவீதியில் உள்ள நிலைக்கு வந்தவுடன் மேளதாள முழங்க பாரம்பரிய முறையுடன் சாமியை அழைத்து சென்று கோயிலின் உள்ளே ஆயிரம் கால் மண்டபத்தில் வைப்பார்கள். செவ்வாய் அதிகாலை 3 மணி முதல் மகா அபிஷேகம் நடைபெறும். இதனை தொடர்ந்து மதியம் 1 மணியிலிருந்து 3 மணிக்குள் தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் நடராஜர்(சிவன்) மற்றும் பார்வதி பக்தர்களுக்கு நடனம் ஆடியவாறே காட்சி அளிப்பார்கள்.
காளிதாஸ்