கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தமிழ்நாடு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மணியரசன் "தமிழ்நாடு வேலைகள் தமிழருக்கே என உறுதி செய்ய தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும். இதுகுறித்து எங்கள் இயக்கத்தின் சார்பில் கடந்த 2018- ஆம் ஆண்டு தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளோம். அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே 1 முதல் 12- ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக மக்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டம் வெற்றியடைய செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் உள்ளதைப் போல் உள் அனுமதி சீட்டு முறையை தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசு விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும். மக்கள் தொகை பதிவேடு சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் தமிழக இளைஞர்களை குற்ற நோக்கத்துடன் ஏமாற்றும் நோக்கில் மோசடிப் பேர் வழியாக நடந்துகொள்கிறார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை வரவேற்கிறோம். அதேநேரத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு கொடுத்த அனுமதி குறித்து தெளிவான விளக்கத்தை தமிழக முதல்வர் அளிக்க வேண்டும். கடலூரில் ரூ 50 ஆயிரம் கோடி மதிப்பில் பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு மண்டலம் அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும். கடலூர் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் பாதிக்கப்படும்" என்றார்.
கூட்டத்தில் இயக்கத்தின் பொருளர் ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வைகறை, தமிழ்மணி, ராசு, அருணபாரதி, மாரிமுத்து, விடுதலைச்சுடர், லட்சுமி அம்மாள், முருகன், முழுநிலவு, சிதம்பரம் குபேரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.