போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த காட்வின் என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, காட்வினிடம் இருந்த போதைப்பொருளைக் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கானது சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, போதைப்பொருளை கடத்தி வந்த காட்வினுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.