கரோனா ஊரடங்கால் கடந்த 2 மாதங்களாக சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள ரிச்சி தெருவில் உள்ள கடைகளும் மூடிக்கிடந்தன. ரிச்சி தெருவில் ஏராளமான எலக்ட்ரானிக் கடைகளும், செல்போன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. 1500-க்கு மேற்பட்ட கடைகள் ஒரே நேரத்தில் மூடப்பட்டதால் வியாபாரிகள் வருவாய் இழந்து தவித்தனர்.
இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் ரிச்சி தெருவிலும் கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அங்குள்ள வியாபாரிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
1, 3, 5, 7, போன்ற ஒற்றை இலக்க எண்களுடன் கூடிய கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் திறக்கப்பட்டிருக்கும். 2, 4, 6 போன்ற இரட்டை வரிசை கொண்ட கடைகளை செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும், சமூக இடை வெளியை பின்பற்றுவதற்கு வசதியாகவும் சுழற்சி முறையை பின்பற்ற கடை உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரிச்சி தெருவில் பொது மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் கரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக அடிக்கடி ரிச்சி தெருவில் சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.