"தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, நெல்லை, புதுக்கோட்டை, நீலகிரி, திருச்சி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 8 செ.மீ மழையும், ஏற்காடு, சித்தார் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அரபிக்கடலில் இருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை (02/06/2020) புயலாக வலுப்பெறும். தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 45- 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு ஜூன் 4 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது". இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.